பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 90 மனுக்கள் மீது உடனடி தீர்வு


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 90 மனுக்கள் மீது உடனடி தீர்வு
x

தர்மபுரியில் காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 90 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். சொத்து பிரச்சினை, நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை, தொழில் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக விசாரணை நடத்தினார்.

உடனடி தீர்வு

இந்த விசாரணையின் போது புகார் மனுதாரர், எதிர் மனுதாரர் இருதரப்பையும் அழைத்து சமரசம் பேசி பல்வேறு மனுக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீர்வு கண்டார். இதேபோன்று நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத குடும்ப பிரச்சினைகளுக்கும் சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 90 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் வரம் தோறும் புதன்கிழமை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெறும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்தார். இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப் இன்ஸ்பெக்டர் பாருக் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலில் முகாம்

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமையொட்டி டென்ட் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் கொளுத்தும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 5 மணி நேரம் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு கண்டார். இதனை முகாமுக்கு வந்த பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.


Next Story