போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதே போல நேற்றும் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை மற்றும் குளச்சல் போலீஸ் துணை சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் முடிக்கப்படாமல் உள்ள புகார் மனுக்களை விரைந்து முடிக்க மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை முகாமுக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவ்வாறு வந்த மனுதாரர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒவ்வொரு துணை சரகம் வாரியாக வந்த புகார் மனுக்களை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்தனர். மேலும் முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். முகாமில் சுமார் 50 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மனு அளித்த ஒரு பெண் தனது கோரிக்கை மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உறுதியளித்தார்.