பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம்


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:01 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. திருவாரூர் தாலுகா பழையவலம் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா மகிழஞ்சேரி கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இதேபோல் குடவாசல் தாலுகா நெய்க்குப்பை கிராமத்தில், திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா, அன்னுக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா, அனுமந்தபுரம் கிராமத்தில், திருவாரூர் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் தலைமையிலும் நடக்கிறது.

பெயர் சேர்த்தல்-நீக்கல்

மன்னார்குடி தாலுகா, கீழநத்தம் கிராமத்தில், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பல் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பருத்தியூர் கிராமத்தில், திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா, பின்னத்தூர் கிராமத்தில் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story