நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை-விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:- தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியத்தில் வெள்ளை பி.வி.சி. பைப் வழங்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் உதவித்தொகை வழங்க வேண்டும்.
நிவாரணம்
பருவமழை தவறிய நெற்பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பயிர் சேதம், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். போர்வெல் மானியம் வழங்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும். வாடகையில்லா பொக்லைன் எந்திரம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசியதாவது:-
விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய கள ஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆக்கிரமிப்பு
மேலும், சிவகங்கை மாவட்டத்தின் நீர்நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும். நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான உழவர் இதழினை கலெக்டர் வெளியிட, அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.