கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது..

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் 973 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 94 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 24 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 79 ஆயிரத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடிநீர் பாதிப்பு

கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் குடகன் ஆற்றில் கலந்து மீண்டும் நங்காஞ்சி ஆற்றின் வழியாக கரூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்கள் நச்சுகிருமிகளால் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மணல் குவாரி வேண்டாம்

வன்னியர் மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நெரூர் வடபாகம் மற்றும் அச்சமாபுரம் பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ளுவதற்கான பகுதியாக மணல் குவாரிகள் அமைக்க கடந்த 4-ந்தேதி பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நாங்கள் கலந்து கொண்டு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்து வந்தோம். இந்நிலையில் நெரூர் வடபாகம் மற்றும் அச்சமாபுரம் பகுதிகளில் அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிடுவதும், ஆற்றில் இருந்து பாதைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்கள் நடப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே புதிய மணல் குவாரிகள் அமையாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்படுள்ளது.

ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றம்

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தீபா என்பவர் கொடுத்த மனுவில், எனது கணவர் ஈரோடு அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு வேறொரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி ஒருவர் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டார். அவரிடம் எங்களது பணத்தை மீட்டு தந்து உதவ வேண்டும், என்றார்.

உட்கார வைத்து மனு பெறப்படும்

பின்னர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு குறை தீர்ப்பதற்காக மனுக்களை கொண்டு வரக்கூடிய பொது மக்களை உரிய மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு உரிய இருக்கை வசதிகள் கொடுத்து யாரும் நிற்காத வண்ணம் மனுக்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படிகரூர் மாவட்டத்தில் இன்று அதாவது நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரையும் அமர வைத்து மனுக்களை பெறக்கூடிய நடைமுறைகளை தொடங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி வரிசையில் வரும் போதும் மக்கள் நிற்காத வண்ணம் அவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். இனிவரும் ஒவ்வொரு வாரமும் இதே நிலையில் தான் மனுக்கள் பெறப்படும், என்றார்.


Next Story