கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.கூட்டத்தில், கரூர் மாவட்டம், போத்துராவுத்தன்பட்டி கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், போத்துராவுத்தன்பட்டி, குள்ளம்பட்டி, இருப்புக்குழி பகுதியில் உள்ள பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். 2022-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 3 வாரங்கள் மட்டுமே 100 வேலை செய்துள்ளோம். அதன் பிறகு கடந்த 3 மாதங்களாக எந்த வேலையும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. 100 நாள் வேலை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

காவிரி குடிநீர் வேண்டும்

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவிரி நீரை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தும்பிவாடி ஊராட்சியில் உள்ள சக்தி நகர் பகுதி பொதுமக்களுக்கு உப்பாக வரும் குடிநீரை நல்ல குடிநீராக வழங்க வேண்டும், சின்னதாராபுரம், அக்ரஹாரம் பகுதியில் முழு நேர ரேஷன் கடையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்ய கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் சாா்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கடந்த மாதம் 10-ந்தேதி காளிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு காரணமானவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story