போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள், போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களில் உரிய நடவடிக்கை எடுக்காத மனுக்கள் குறித்தும், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரையும் போலீஸ் சூப்பிரண்டு வரவழைத்து நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.இதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தை ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், செந்தாமரை மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஐ.ஜி. துரையிடம் பண மோசடி, பத்திரம் காணாமல் போனது, போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இவைகளை விசாரணை செய்த டி.ஐ.ஜி. உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.