குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கைத்தறி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கைத்தறி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கைத்தறி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 1044 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 52 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 74 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 95 ஆயிரத்து 922 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கைத்தறி தொழில் பூங்கா

கூட்டத்தில் கடவூர் வட்டம், மத்தகிரி கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கோரிமேடு பகுதியில் பாளையம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள இடத்தில் அரசு சார்பில் கைத்தறி தொழில் பூங்கா அமைய உள்ளதாகவும், அதற்கான இடத்தை பார்வையிடுவதற்காக அதிகாரிகள் வந்து சென்றதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாய தொழில் செய்து வரும் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவே கைத்தறி தொழில் பூங்கா அமைக்க வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கழிவுநீர் வெளியேற வசதி

கரூர், நரிகட்டியூர், சணப்பிரட்டி எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-நாங்கள் மேற்கண்ட பகுதியில் 96 வீடுகள் கொண்ட குடியிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குடியேறிய காலம் முதலே எங்கள் குடியிருப்பின் கழிவுநீர் வெளியேற வசதி செய்து தரப்படவில்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொடுக்கப்படாத கூலி

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வரை அவர்கள் வேலை செய்த காலத்திற்கான கூலி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

கடவூர் வட்டம், தென்னிலை கிராமம், மாமரத்துப்பட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-அரசுக்கு சொந்தமான உருமன்குளம் மற்றும் நீர்வழிப்பாதை, நீர்வரத்து, நீர் வெளியேற்றம் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், குளித்தலை முதல் மைலம்பட்டி செல்லும் சாலையில் இருந்து இந்த குளத்திற்கு செல்லும் பாதை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்நடைகள் பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடவூர் ஊராட்சி ஒன்றியம், தென்னிலை ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் வரதராஜன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- மாமரத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணியர் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால், திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழற்குடை அமைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கண்காட்சி அரங்கம்

முன்னதாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பட்டுவளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கத்தை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.


Next Story