கடந்த மாதம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவில்லை
பெரம்பலூரில் கடந்த நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெறாததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் விவசாயிகள் குறைதீர்க்கும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் கடந்த 28-ந் தேதி வந்தார். அன்றைய தினம் அருகே அரியலூர், திருச்சி மாவட்டங்களுக்கும் முதல்வர் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருகே உள்ள மாவட்டங்களில்...
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் வருகைக்கு முன்பு கடந்த 25-ந்தேதியும், திருச்சி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதியும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் கலந்து கொண்ட அரசு விழா அரியலூரில் நடந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டது விவசாயிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் மீது அக்கறை இல்லை
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கூறுகையில், தமிழகத்தில் 1981 ஆண்டு முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் மாறாக பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தாதது விவசாயிகளின் மீது மாவட்ட நிர்வாகத்துக்கு அக்கறை இல்லாததை காட்டுகிறது. குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தாதது விவசாயிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கூட்டம் நடத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களும் வருவதில்லை. கூட்டத்தில் வருவாய்த்துறை தொடர்பாக குறைகள் பேச விவசாயிகள் அனுமதி மறுக்கப்படுகிறது. மனுக்களும் சரியாக வாங்கப்படுவதில்லை, என்றார்.
இந்த மாதம் 2 முறை நடத்த வேண்டும்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் கூறுகையில், தற்போது மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதாலும், சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோயாலும், பெய்த மழையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவததோடு, என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். இதுகுறித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பேசி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தலாம் என்று விவசாயிகள் இருந்து வருகிறார்கள். மேலும் எறையூரில் உள்ள கரும்பு சர்க்கரை ஆலையின் அரவைக்கு கரும்பும் வெட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் ஒரு மாத பிரச்சினையை பேச இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் போனதற்கு விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனவே இந்த மாதம் 2-வது வாரத்திலும் கடந்த நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், 4-வது வாரத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.