பவானி மாணிக்கம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


பவானி மாணிக்கம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்   அமைக்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x

பவானி மாணிக்கம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

பவானி மாணிக்கம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எங்கள் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் ஏதேனும் உடல் நலக் குறைவு, பிரசவம் மற்றும் அவசர சிகிச்சை போன்ற மருத்துவ காரணங்களுக்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு செல்வதற்கு போதுமான வாகன வசதிகளும் கிடையாது. எனவே மாணிக்கம்பாளையம்பகுதியில் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

சுகாதார சீர்கேடு

சென்னிமலையில் உள்ள சோழன் வீதி குடியிருப்போர் மற்றும் வணிகர்கள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது:-

சென்னிமலை, சோழன் வீதியில் பெரிய சாக்கடை, மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது மக்களுக்கு பயன்படாத வகையில், குறைந்த ஆழம், அகலத்துடனும், சாக்கடை கழிவு நீர் செல்ல முடியாத வகையில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி பொதுமக்களுக்கு கடும் சுகாதார சீர்கேடு ஏற்படும்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் சென்னிமலை மலை மீதும், நகரின் மேற்கு பகுதியில் இருந்தும் வரும் மழை நீரை, செங்குட்டை எனும் இடத்தில் சேகரிக்க வேண்டும். மலையின் தெற்கு, கிழக்குப் பகுதி மழை நீரை கணவாய் செல்லும் ரோட்டில், வனப்பகுதியில் சேகரிக்க தகுந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னிமலையில், மழை நீரும், சாக்கடை கழிவு நீரும் கலந்து ஊரின் கிழக்கு பகுதியில் தேங்கி நிற்கிறது. எனவே, சாக்கடை நீர் தனியாக வெளியேறும் வகையில் அதன் கட்டுமானத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கருமுட்டை விற்பனை

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மற்றும் சில மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல பெண்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, இந்த பிரச்சினையில் சுகாதாரத் துறை மூலமாக அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் கருமுட்டை விற்பனை தொடர்பான விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவை சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மொத்தம் 205 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story