அரியலூர் மருத்துவமனையில் குறைகள் சரி செய்யப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


அரியலூர் மருத்துவமனையில் குறைகள் சரி செய்யப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x

அரியலூர் மருத்துவமனையில் குறைகள் சரி செய்யப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அரியலூர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சியை விரிவுபடுத்த துறை சார்ந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள அனைத்து விளையாட்டுகளுக்கான பயிற்சியாளர் காலி பணியிடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் அதற்கான தீர்வு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டபோதும், இதுவரை முழுமையாக செயல்படவில்லை, என்றனர். இது குறித்து அவர், அருகில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது குடியிருப்புகளில் சில பணிகள் முடிவடையாததால், அங்கு டாக்டர்கள், செவிலியர்கள் தங்க முடியவில்லை. மேலும் சில வசதிகள் முழுமை பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குறைகளை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


Next Story