மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டாமாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.பின்னர் வருவாய்த்துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவுக்கான ஆணைகளையும், பட்டுவளர்ச்சித்துறை சார்பில் பட்டுப்புழுவை தொடர்ந்து சிறந்தமுறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகள் 3 பேருக்கு ரொக்கப்பரிசும், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசுத்தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சை மாவட்டம் குறித்து நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலையும், சான்றிதழ், பதக்கமும் வழங்கப்பட்டது.
---