ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்


ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்
x
தினத்தந்தி 6 July 2023 10:50 PM IST (Updated: 7 July 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களின் விலை தொடர்ந்து எறுமுகத்தில் உள்ளது.

திருப்பூர்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் எப்போதுமே பொதுமக்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மளிகை, காய்கறியின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

தக்காளி விலையை பொறுத்தவரையில், விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே சில்லறைக் கடைகளில் அதைவிட அதிகமாக ஒரு கிலோ ரூ.150-க்கும் விற்பதையும் பார்க்க முடிகிறது.

தக்காளிதான் இப்படி என்றால், இஞ்சி விலையைக் கேட்டால் நெஞ்சு வலி வந்துவிடும் போல் இருக்கிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.250 முதல் ரூ.300 வரை மொத்த மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் விற்பனை

தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட ரேஷன் கடைகள், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலையில் அதனை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டு, அதன்படி விற்பனையும் நடந்து வருகிறது. ஆனாலும் அது அனைத்து மக்களுக்கும் சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறிதான்.

அதுமட்டும் அல்லாது, சின்ன வெங்காயம், பீன்ஸ், பாகற்காய், மிளகாய் உள்பட முக்கிய காய்கறி வகைகளின் விலை 'கேட்டாலே ஷாக்' அடிக்கும் வகையில் எகிறிப்போய் இருக்கிறது.

மளிகை பொருட்களின் விலையோ மற்றொரு பக்கம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரிசி, துவரம் பருப்பு, சீரகம், சோம்பு, பூண்டு, மிளகாய், ஏலக்காய் மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றின் விலை கடந்த மாதத்தைவிட பெருமளவில் அதிகரித்து உள்ளது.

தக்காளி விலை கட்டுக்குள் வருவதற்கு இன்னும் 2 வார காலங்கள் ஆகும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறி வகைகள் வரத்தை பொறுத்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மளிகை பொருட்கள் விலையை பார்க்கும் போது, இப்போதுதான் உயர ஆரம்பித்து இருப்பதாகவும், இன்னும் வரக்கூடிய நாட்களிலும் உயருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இப்படியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.


Next Story