விளையாட்டு மைதானத்தில் கேலரி பறந்து விழுந்து 3 வீரர்கள் காயம்
உடுமலையில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த கேலரி பறந்து விழுந்ததில் 3 விளையாட்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.
நேதாஜி விளையாட்டு மைதானம்
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு கால் பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட், ஆக்கி, ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் காலை மற்றும் மாலையில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அத்துடன் மண்டல, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இந்த மைதானத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உடுமலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென் மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூறாவளிக்காற்றுடன் மழை
இதில் கேரளா உள்பட தென் தமிழகத்தில் இருந்து 48 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் விதமாக மைதானத்தில் பிளாஸ்டிக் சீட்டுகளால் கேலரி அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் மாலை கால் இறுதிப்போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென இடி, மின்னல், பலத்த சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி மற்றும் சேர்கள் காற்றில் பறந்தது. இதனால் கேலரியில் மழைக்கு ஒதுங்கிய வீரர்கள், பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து மைதானத்தின் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் மழை ஓய்ந்த பின்பு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தில் ஓடி வந்ததில் கீழே விழுந்து 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. நேற்று வழக்கம் போல் போட்டிகள் நடைபெற்றன. இன்று (புதன்கிழமை) இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி காற்றில் பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.