நிலக்கடலையில் அதிக மகசூலுக்கு விதைப்பரிசோதனை அவசியம்
நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற விதை பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.
நிலக்கடலை சாகுபடி
நாமக்கல் வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி, சரண்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் நிலக்கடலையின் தரத்தை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும். நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆகியவற்றால் விதையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைகளின் தரப்படி நிலக்கடலையின் முளைப்புத்திறன் 70 சதவீதம், ஈரப்பதம் 9 சதவீதம் மற்றும் புறத்தூய்மை 96 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக விதையின் ஈரப்பதம் அதிகமாக இருப்பின் புச்சி மற்றும் பூஞ்சான் தாக்குதலுக்கு வழிவகுப்பதுடன் முளைப்புத்திறனும் பாதிக்கப்படுகிறது. ஆகவே விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதைப்பரிசோதனை செய்வதற்கு 500 கிராம் அளவிலான நிலக்கடலையினை விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதை தரத்தினை அறிய வேண்டும்.
அதிக மகசூல்
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.80 என்ற வீதத்தில் விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.