குரூப்-2 தேர்வை 1,562 பேர் எழுதினர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் குரூப்-2 தேர்வை 1,562 பேர் எழுதினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் குரூப்-2 தேர்வை 1,562 பேர் எழுதினர்.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந் தேதி நடந்தது. முதல் நிலை தேர்வுக்கான முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வெளியானது. அதில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான மெயின் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் நடந்தது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை கண்காணிக்க 9 முதன்மை கண்காணிப்பாளர்களும், 1 பறக்கும்படை, 3 நடமாடும் அலகு, 9 ஆய்வு அலுவலர்கள் உள்பட மொத்தம் 44 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அத்துடன் தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,687 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,562 பேர் தேர்வு எழுதினர். 125 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனிடையே கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர். தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆய்வின் போது, உதவி கலெக்டர் சுகுமார், தாசில்தார் சம்பத்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.