"குரூப்-2 தேர்வு குளறுபடி மனஉளைச்சலை ஏற்படுத்தியது"


குரூப்-2 தேர்வு குளறுபடி மனஉளைச்சலை ஏற்படுத்தியது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

"குரூப்-2 தேர்வு குளறுபடி மனஉளைச்சலை ஏற்படுத்தியது"

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வரிசை எண்களில் குளறுபடி மன உளைச்சலை ஏற்படுத்தியது என்று தேர்வர்கள் தெரிவித்தனர்.

குரூப்-2 தேர்வு

கோவை மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் குரூப்-2 தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு மையத்துக்கு வந்தபின்னர் கேள்வித்தாள் கொடுக்கும்போது குளறுபடிகள் கண்டறியப்பட்டன. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் பதிவெண்களின் வரிசையிலும் வித்தியாசம் இருந்தது. இந்தகுளறுபடியால் தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர்களிடம் பலரும் புகார் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. பகல் ஒரு மணிக்கு தேர்வு முடிந்தது. இந்த தேர்வு தாமதம் ஆனதால் மதியம் நடைபெற்ற பொதுத்தேர்வும் பகல் 2 மணிக்கு பதிலாக 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணிக்கு நடைபெற்றது.

தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:-

மனஉளைச்சல்

ரம்யா (சாய்பாபாகாலனி) :- இந்த தேர்வுக்கு முன்கூட்டியே தயார் செய்து இருந்தேன். காலையில் தமிழ்மொழி தகுதிதாளுக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அப்போது எனக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பதிவெண்ணும், தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் இருந்த பதிவெண்ணும் மாறி, மாறி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். மனஉளைச்சல் ஏற்பட்டது. தேர்வுமைய கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து கேட்டேன். பின்னர் சரியான பதிவெண்ணுடன் கூடிய தேர்வுத்தாள் மாற்றி கொடுக்கப்பட்டு தேர்வு எழுதினேன்.

அரைமணிநேரம் தாமதம்

அமீரா (அன்னூர்) :- குரூப்-2 முதல் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. கேள்வித்தாள் பதிவெண் குளறுபடியால் தேர்வு காலை 10 மணிக்குதான் தொடங்கியது. அரைமணிநேரம் தாமதமாக தொடங்கினாலும் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு பகல் 1 மணிக்கு தேர்வு முடிந்தது. கேள்விகள் சற்றுகடினமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சிறப்பாக எழுதினேன்.

ஷாமிலா (கவுண்டம்பாளையம்) :- ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி வெளியான குரூப்-2 தேர்வில் தேர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட தேர்வு எழுத நேற்று தேர்வு மையத்துக்கு வந்தேன். தேர்வு மையத்தில் நடைபெற்ற குளறுபடியால் பலரும் சிரமம் அடைந்தோம். இருந்தாலும் தேர்வு எழுதி முடித்தோம். அரசு பணிக்கு தேர்வாணைய தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதுடன், முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகிறது. இந்தநிலையில் இதுபோன்ற தேர்வுகளும் குளறுபடியாக நடைபெறுவது எங்களைப்போன்று அரசு பணிக்கு காத்திருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

விடைத்தாள் ஏற்கப்படுமா?

ஆர்.எஸ்.புரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் கூறும்போது, எங்களது தேர்வு மையத்தில் வினாத்தாளின் வரிசை எண் மாறி இருந்தது. இதைத்தொடர்ந்து தேர்வு கண்காணிப்பாளர், அதனை அடித்துவிட்டு, பேனாவால் தங்களது பதிவு எண்ணை அதில் குறிப்பிடும்படி கூறினார்.இதனால் அவ்வாறு செய்தோம். ஆனால் தேர்வாணைய விதிமுறையின்படி விடைத்தாளில் அடித்தல், திருத்தல் கூடாது. தற்போது அடித்துவிட்டு எழுதியுள்ளதால் எங்களது விடைத்தாள் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. இதனை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




Next Story