குரூப்-2 தேர்வை 33,570 பேர் எழுதினர்

தர்மபுரி மாவட்டத்தில் 136 மையங்களில் குரூப்-2 தேர்வை 33,570 பேர் எழுதினர். 4,242 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 136 மையங்களில் குரூப்-2 தேர்வை 33,570 பேர் எழுதினர். 4,242 பேர் தேர்வு எழுத வரவில்லை.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு பணிகளுக்கான குரூப்-2 தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 37,812 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று தேர்வை 33,570 பேர் எழுதினர். 4,242 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மாவட்டம் முழுவதும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையத்திற்கு வந்த அனைத்து தேர்வர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வுகளை கண்காணிக்க உதவி கலெக்டர் நிலையிலான 6 பறக்கும் படைகளும், 27 நடமாடும் குழுக்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த 272 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் திவ்யதர்சினி தர்மபுரியில் உள்ள எஸ்.வி. ரோடு ஸ்ரீ விஜய் வித்யாஸ்ரம் பள்ளி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் ஸ்கிரைபர் உதவியாளருடன் தேர்வு எழுதுவதை அவர் பார்வையிட்டார். தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் கேட்டறிந்தார்.
வாக்குவாதம்
தர்மபுரி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வுகள் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுபவர்கள் நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்திற்கு 11 பேர் 9 மணிக்கு மேல் வந்தனர். தாமதமாக வந்த அவர்களை தேர்வு மையத்திற்குள் செல்ல அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கு பணியில் இருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.