122 மையங்களில் குரூப்-2 தேர்வு


122 மையங்களில் குரூப்-2 தேர்வு
x

கடலூர் மாவட்டத்தில் 122 மையங்களில் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை 51 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

கடலூர்

கடலூர்,

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்- 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு மே 21-ந் தேதி (அதாவது நாளை) தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் சுமாா் 11.78 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடக்கிறது. இதற்காக கடலூரில் 42 தேர்வு மையங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாணவர்களின் வசதிக்காக அனைத்து அறைகளிலும் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நடமாடும் குழுக்கள்

மாவட்டத்தில் இத்தேர்வை 51 ஆயிரத்து 660 பேர் எழுதுகின்றனர். ஒவ்வொரு அறையிலும் 20 பேர் மட்டும் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிக்க கூடுதல் கலெக்டர் தலைமையில் பறக்கும்படை குழுக்கள் மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க ஏதுவாக நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

8.30 மணிக்கு வரவேண்டும்

மேலும் காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அதாவது 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டின் அனைத்து பகுதிகளையும் பதிவிறக்கம் செய்து கையில் கொண்டு வரவேண்டும். மேலும் ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு தேவையான தேர்வு வினாத்தாள் நேற்று லாரியில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் அதனை தொழிலாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அங்குள்ள அறையில் பாதுகாப்பாக இறக்கி வைத்தனர். அப்போது கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பூபாலசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து அந்த அறை பூட்டப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் அந்தந்த தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story