ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2,467 கோடி வசூல்


ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2,467 கோடி வசூல்
x

சேலம் ஆணையகத்தில் கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2 ஆயிரத்து 467 கோடி வசூலாகி உள்ளது என்று ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் மீனலோசனி கூறினார்.

சேலம்

சேலம் ஆணையகத்தில் கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியாக ரூ.2 ஆயிரத்து 467 கோடி வசூலாகி உள்ளது என்று ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் மீனலோசனி கூறினார்.

ஜி.எஸ்.டி. தினம் கொண்டாட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி நேற்று சேலம் அணைமேடு பகுதியில் உள்ள மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. ஆணையகத்தில் ஜி.எஸ்.டி. தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் மீனலோசனி தலைமை தாங்கினார். இணை ஆணையர் அருண் பிரசாத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, விழா நடைபெற்றது. விழாவில் ஆணையர் மீனலோசனி பேசியதாவது:-

சேலம் மத்திய ஜி.எஸ்.டி. ஆணையகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இங்கு ஜி.எஸ்.டி. வரி வசூல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 81 கோடியாக இருந்தது. தற்போது 2021-22-ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 467 கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், நடைமுறையை எளிதாகவும் மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு...

இதை வரி செலுத்துவோர் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தியாவை ஒருதேசம் ஒருவரியாக மாற்றி நாட்டை பொருளாதார சங்கமமாக பிணைக்கிறது. ஜி.எஸ்.டி. பொருளாதாரத்தில் ஊக்கவிளைவை ஏற்படுத்தும். ஏற்றுமதியாளர்கள், சிறுவணிகர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுவான நுகர்வோர்களால் பல்வேறு துறைகளுக்கு பயன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வரி நடவடிக்கைகளை தாமதமின்றி முறையாக செலுத்திய முக்கிய வரி செலுத்துவோர் மற்றும் மேட்டூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் வசந்தி, பெண் ஆட்டோ டிரைவர் லட்சுமி உள்பட பலர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் இணை ஆணையர் ராஜேஷ் விதல்ராவ் செல்கி, மாநில ஜி.எஸ்.டி. இணை ஆணையர் ஜெயராமன், டாமின் கிராம வங்கி பொதுமேலாளர் தாமோதரன், ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் துணை பொது மேலாளர் இளங்கோ மற்றும் வர்த்தக பிரமுகர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story