ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன -நிதி அமைச்சர் பேச்சு


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன -நிதி அமைச்சர் பேச்சு
x

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிவைத்து அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தர்மபுரி பகுதியில் தொழிற்சாலைகள்

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- ஓசூர்-தர்மபுரி இடையேயான 4 வழிச்சாலை முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது, தொழிற்சாலைகள் எல்லாம் ஓசூர் பகுதியை சுற்றியே வருகிறது. தர்மபுரி பின்தங்கிய நிலையில் இருக்கிறது. எனவே, இனி வருங்காலங்களில் தர்மபுரி பகுதியில் தொழில் நிறுவனங்கள் அமைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 27 முதல் 82 வரை 56 வாக்குறுதிகள் வேளாண்மை துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வேளாண்மை பட்ஜெட்டில், அதில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே அறிவிப்பாக வந்துள்ளன. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

போதிய வருமானம் இல்லை

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை. ரூ.1,000 அளவுக்கு இன்னும் இடைவெளி உள்ளது. அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லை. ஆனால், தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நவதானிய வகைகளை அரசே பெற்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யும் என்ற அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும்.

கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரிப்பு

வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:- கரும்பு விவசாயிகளுக்கு பாக்கித்தொகை எதுவும் நிலுவையில் இல்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு 2¼ லட்சம் ஏக்கராக இருந்தது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அதன் அளவு 95 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. இப்போது, கடந்த 2 ஆண்டு காலத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு 1 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2, 3 ஆண்டுகளில் கரும்பு ஆலைகள் நல்ல லாபம் பெறும்.

தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்திக்கொடுக்கப்படும்.

வேளாண் பல்கலைக்கழகம்

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- தேர்தல் பிரசாரத்தின்போது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு அதை நம்பிக்கையாக முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தில் 2 கோடியே 13 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன.

கோவையில் இருப்பதுபோன்று மதுரையிலும் வேளாண் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், கூலித் தொகையும் ரூ.300 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கூறியதை எப்போது நிறைவேற்றுவீர்கள்?. தமிழ்நாட்டில் மயில்களின் பெருக்கம் அதிகமாகிவிட்டது. விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடலை பயிரிட்ட இடங்களில் செடி வளருகிறது, ஆனால், அதன் விதையை மயில்கள் எடுத்து சாப்பிட்டு விடுகின்றன. எனவே, மயில்களை கட்டுப்படுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால்...

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி:- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கும் ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்துவோம் என்று கூறியது உண்மைதான். கடந்த ஆட்சி காலத்தில் ஊதியத்தொகை ரூ.200 ஆகக் கூட இல்லை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்தத்தொகை ரூ.281 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில், தற்போது 32 கோடி வேலைத் திறன் நாளாக உள்ளது. அதை 40 கோடி வேலைத் திறன் நாளாக உயர்த்துவோம்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கும்.

சத்துணவு திட்டம்

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். அப்போது, எல்லோருமே அரசின் கஜானா காலியாகிவிடும் என்றார்கள். அப்போது தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி கூட, மாணவர்களுக்கு உணவுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.15-ஐ மாதந்தோறும் குழந்தைகளின் தாயாரிடம் கொடுத்துவிடலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனாலும், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். வெற்றிகரமாக நிறைவேற்றினார். கிராம அளவில் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர். அனைத்து வகையிலும் மாநிலம் வளர்ச்சி அடைந்ததற்கு 30 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியே காரணம்.

உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி:- தமிழகத்தில் 3 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் ஒரு பள்ளி என்று கொண்டுவந்தவர் கருணாநிதி. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று வலியுறுத்தியவரும் அவரே. எனவே, உயர் கல்வித்துறை வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.

சுதந்திரத்தை இழந்துவிட்டது

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:- சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். நிதி இருந்தால்தானே அதை செலவு செய்ய முடியும். கடனை ஏற்றிக்கொண்டே சென்றால் வட்டிச் சுமை அதிகரிக்கும். அன்று வாட் வரியை 1 சதவீதம் உயர்த்திய பிறகுதான், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரால் செயல்படுத்த முடிந்தது.

இப்போது, ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதிப்பதால், மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டது. அன்று குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடியும், தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தனர்.

அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.32 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story