ஜி.எஸ்.டி. வரி உயர்வால்வெட்கிரைண்டர், பம்ப்செட் தொழில் கடுமையாக பாதிக்கும்
ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சிறு, குறு தொழில்முனைவோர் கவலை அடைந்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி உயர்வு
தொழில் நகரான கோவை, மோட்டார் பம்ப்செட் உற்பத்தியில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் கோவை போன்ற தொழில் நகரத்திற்கு குஜராத் பம்ப்செட்கள் கடும் தொழில் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் என பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பம்ப்செட் விலை அதிகரிக்கும்
தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் கார்த்திக் கூறியதாவது:-
பம்ப்செட் உற்பத்தி நிறுவனங்கள் பி.ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு தரச்சான்று கொண்ட பம்ப்செட் தயாரிப்பது குறித்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், திடீரென பம்ப்செட் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் ஏற்படும் விலை உயர்வு விவசாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பம்ப்செட் திறன்களுக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் விலை உயரும். ஏற்கனவே விவசாயம் நலிவடைந்து வரும் நிலையில் பம்ப்செட் விலை உயர்வு வேளாண் துறையில் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறைக்க வேண்டும்
கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:-
பம்ப்செட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது குஜராத் பம்ப்செட் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் தொழிலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்தது கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே நெருக்கடி காரணமாக குறுந்தொழில் துறையினர் பலர் இந்த தொழிலை விட்டு சென்று விட்டனர். ஊழியர்கள் பலர் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. வரி அதிகரித்துள்ளது கோவை மாவட்ட பம்ப்செட் தொழில் வளர்ச்சியில் மிக கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சிறு, குறு தொழில்முனைவோர் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முற்றிலும் நீக்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் விவசாயம் நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை போர்வெல் பம்ப்செட் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பம்ப்செட் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் (கட்சி சார்பற்றது) கந்தசாமியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
வெட்கிரைண்டர்
கோவை வெட்கிரைண்டர் சங்க தலைவர் ஆர்.சவுந்தர்குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் வெட்கிரைண்டர் தொழிலை நம்பி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கோவையில் தயாராகும் வெட்கிரைண்டர்களை உலகம் முழுவதும் அனுப்பி வருகிறோம். ஏற்கனவே கொரோனா காலத்தில் வெட்கிரைண்டர் தொழில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெட்கிரைண்டர் தொழில் மிகவும் பாதிக்கப்படும் எனவே ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.