ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு மாற்றவேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு மாற்றவேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு: ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு மாற்றவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப்பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படவில்லை. மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீதுதான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி. ஏழை மக்களிடமிருந்து அவர்களின் மக்கள் தொகையை விட அதிக சதவீதம் தொகை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களிடமிருந்து கிட்டத்தட்ட அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாகவும், பணக்காரர்களிடமிருந்து அவர்களின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவுமே ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மட்டும்தான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்பதே அறியாமைதான். உலகின் பெரும் பணக்கார நாடு அமெரிக்காதான். ஆனால், அங்கு ஜி.எஸ்.டி.யும் இல்லை. ஒரே நாடு ஒரே வரிமுறையும் இல்லை. ஆனால், அங்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரிவிதிப்புகள் பணக்காரர்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்து விடக்கூடாது. எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கவேண்டும்; பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அரசு மாற்றவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story