சீட்டு நிதி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் கடலூரில் சங்க நிர்வாகி பேட்டி

சீட்டு நிதி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என சிட்பண்ட் சங்க தலைவர் சீனுவாசன் கூறினார்.
பேட்டி
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சிட்பண்ட் சங்க தலைவர் சீனுவாசன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏலச்சீட்டுகள் பாரம்பரியமிக்கது. இந்த தொழில் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஏலச்சீட்டை அரசின் அனுமதி பெற்று தான் நடத்தி வருகிறோம். இந்தியாவில் மொத்தம் 20 ஆயிரம் சீட்டு நிதி நிறுவனங்களும், தமிழ்நாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளது. மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி வரும் எங்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் எங்கள் தொழில் வளர்ச்சி குறைய ஆரம்பித்து விட்டது.
கஷ்டத்தில் ஆழ்த்தி...
ஆனால் நாங்கள் 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தி வந்தோம். ஆனால் வரியை குறைக்காமல் கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எங்களை மிக பெரிய கஷ்டத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆகவே எங்களுக்கு முழுமையாக ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 சதவீதம் மட்டும் ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள், தாமோதரன், சண்முகம், பாலச்சந்திரன், பிரகாஷ், தெய்வசிகாமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.






