கோழிப்பண்ணையில் திருடிய காவலாளி கைது
சுல்தான்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் திருடிய காவலாளி கைது செய்யப்பட்டார்.
சுல்தான்பேட்டை
கோவை பி.என்.புதூர் முல்லை நகரை சேர்ந்தவர் திருமொழி ராஜா (வயது 54), கால்நடை டாக்டர். இவர் சுல்தான்பேட்ைட அருகே இடையர்பாளையத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணை கடந்த ஒரு ஆண்டாக செயல்படவில்லை. இந்த பண்ணையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காரியாம்பட்டியை சேர்ந்த பிரபு (31) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திருமொழி ராஜா கோழிப்பண்ணைக்கு சென்றார். அப்போது, பிரபுவை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கோழிப்பண்ணைக்குள் சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள், கேபிள் ஒயர்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.