முதுமலையில் அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-அதிகாரிகள் பேச்சுவார்த்தை
முதுமலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கூடலூர்
முதுமலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாற்றிடம் வழங்கும் திட்டம்
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் அடிப்படை மற்றும் அத்தியாவசிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது.
இதனால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அல்லது அவர்கள் கைவசம் வைத்துள்ள பட்டா நிலத்துக்கு இணையாக மாற்றிடம் வழங்கப்பட்டு வருகிறது. பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே சன்னக்கொல்லி பகுதியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டு மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்
இந்த நிலையில் மாற்றிட திட்ட பயனாளிகள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரவில்லை எனக் கூறி கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு முதுமலை ஊராட்சி மக்கள் காலை 11 மணிக்கு வந்து திடீரென முற்றுகையிட்டனர்.. இதை தொடர்ந்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பகல் 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ உறுதி அளித்தார். இதை ஏற்று முதுமலை ஊராட்சி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, முதுமலை ஊராட்சியில் இருந்து பெரும்பாலான பயனாளிகளுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.