ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்ட2 தானியசேமிப்பு கிடங்குகள்
கொங்கல் நகரத்தில் ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடக்கும் 2 தானிய சேமிப்பு கிடங்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேமிப்பு கிடங்கு
கொங்கல் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேங்காயை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட கொப்பரை தேங்காய் உற்பத்தி களங்கள் உள்ளன.
கோரிக்கை
இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கோழிப் பண்ணைகளும் உள்ளன. ஆண்டுதோறும் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
பனி பெய்யும் கார்த்திகை, மார்கழி தை மாதங்களில் கொண்டைக்கடலை சாகுபடியும் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விவசாய பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு வசதியாக கொங்கல் நகரத்தில் இரண்டு சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டன.
ரூ.39லட்சத்தில் 2 சேமிப்பு கிடங்குகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ரூ39 லட்சத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.
சேமிப்பு கிடங்குகள் தற்போது விவசாயிகளின் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கொங்கல் நகரத்தில் கட்டப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.