வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வது அவசியம்
வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வது அவசியம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் என்று தொழிலாளர் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட https://labour.tn.gov.in/ismஎன்ற வலைதளத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்து.
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், சலூன் கடைகளில் பணிபுரிபவர்கள், பாதுகாவலர்கள், கோழிப்பண்ணைகளில் பணிபுரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அரிசி ஆலைகள், குவாரிகளில் பணிபுரிபவர்கள், வீட்டு பராமரிப்பு பணியில் ஈடுபடுவோர்கள், சில்லறை விற்பனையகம், சுயதொழில் புரியும் பணியாளர்கள் மற்றும் மற்ற கடைகள், நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களை https://labour.tn.gov.in/ismஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள், வேலையளிப்போர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதிவேற்றம்
வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவன உரிமையாளர்கள், வேலையளிப்பவர்கள் தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ், உரிமம் எண் ஆகியவை கொண்டு மேற்கண்ட இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளர் குறியீட்டு எண்ணை உருவாக்கி, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்களின் பெயர், செல்போன் எண், பிறந்ததேதி, ஆதார் கார்டு எண், வங்கி கணக்கு எண் விவரங்கள், முகவரி மற்றும் கல்வி தகுதி போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
-----------