உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டும் முகாம்


உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டும் முகாம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் "அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள்" குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளிகளிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியே கலைத்திட்டம், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 2021-2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்கின்றனரா என்பதனை அறிந்திடவும், மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முகாம்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்டது. உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. உயர்கல்வியில் சேர இயலாத நிலையில் உள்ள 120 மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களுக்கு தற்போது வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் உயர்கல்வி தொடர்வதற்கு வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இம்முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், திறன் பயிற்சி மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சிவநடராஜன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் செந்தில்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தனவேல், எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story