குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை: பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி! - வைகோ கண்டனம்
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை சில கயவர்கள் தீ வைத்து எரித்ததால், அதில் பயணம் செய்த 59 பயணிகள் உயிரோடு கருகிச் சாம்பல் ஆகினர்.
அதற்குப் பின்னர் ஒரு வார காலம் குஜராத் மாநிலத்தில் இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் இரத்தத் தடாகத்தில் மிதந்தது. முஸ்லிம் மக்கள் மீது இந்துத்துவ மதவெறிக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
2002 மார்ச் 3 ஆம் நாள், ஒரு கும்பல் கொடூர ஆயுதங்களுடன் ரன்திக்பூர் கிராமத்தில் நுழைந்து பில்கிஸ் பானு என்ற பெண்ணையும், அவரது இரண்டு வயது குழந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் மீது தாக்குதல் நடத்தினார்கள். 11 பேர் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ்பானு மதவெறிக் கயவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.
குஜராத் இனப் படுகொலை வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ., 25.02.2004 அன்று உச்சநீதிமன்றத்தில் தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் கலவரக்காரர்கள் பில்கிஸ் பானு உள்ளிட்ட 17 முஸ்லிம் பெண்களைச் சுற்றிச் சூழ்ந்தனர். தாய்மைப் பேறு அடைந்திருந்த பில்கிஸ் பானு உள்ளிட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். 11 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை குஜராத் காவல்துறை மூடி மறைக்க முயற்சி செய்தது என்று சி.பி.ஐ. சுட்டிக் காட்டியது.
இக்கொடூர கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு 2008 இல் சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2018 இல் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், கொலையாளிகள் தங்களை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, 11 பேரை வெட்டிக் கொன்ற கொலையாளிகளை 75 ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி குஜராத் மாநில பா.ஜ.க. அரசு முன் விடுதலை செய்திருந்தது. இது மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயலாகும்.
குஜராத் மாநில பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல் வெட்கி தலைகுனியச் செய்கிறது. இது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி.
நாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழாவில் செங்கோட்டையில் தேசியக் கொடியை உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரமளித்தல் போன்றவற்றை குறிப்பிட்டார். ஆனால் இவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் துளிகூட தொடர்பு இல்லாதவர்கள் என்பதை குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை மூலம் மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது.
குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை கடும் கண்டனத்திற்குரியது. குஜராத் மாநில அரசு தமது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வன்முறை நடத்திய கொலையாளிகளை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.