குணசீலம் கோவில் தேரோட்டம்


குணசீலம் கோவில் தேரோட்டம்
x

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தென் திருப்பதி

திருச்சி அருகே குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. தென்திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணிக்கு பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேர்த்தட்டில் எழுந்தருளினார். தொடர்ந்து 8.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேருக்கு பின்னால் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அங்க பிரதட்சணம் செய்தனர். தேர் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து காலை 9.35 மணிக்கு நிலையை அடைந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியை www.gunaseelamtemple.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் காணும் வகையில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமஞ்சனம்

இன்று (புதன்கிழமை) திருமஞ்சனம் மற்றும் முத்தங்கி சேவை நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு பெருமாள் புஷ்பப் பல்லக்கில் சேவை சாதிக்கிறார்.தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story