குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திரவுபதியம்மன் கோவில்

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 17-ந் தேதி 70 அடி நீள மூங்கில் கம்பம் வனப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு, அங்குள்ள சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் கம்பத்தை பக்தர்கள் தோளில் சுமந்து, திரவுபதியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து, வளாகத்தில் வைத்தனர். மகா சிவராத்தியையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் விரதம் இருந்தனர். அத்துடன் கோவில் நடை விடிய விடிய திறந்து வைக்கப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கொடியேற்றம்

இதையடுத்து கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை ஆழியாற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் வீதி வழியாக ஊர்வலமாக வாண வேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அம்மன் அருளாளி பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம், சேகண்டி முழங்க, சங்கு நாதம், ஆலயமணி ஒலிக்க வாண வேடிக்கையுடன் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி

இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் செந்தில்வேல் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் வருகிற 25-ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம், 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, 7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்கார திருத்தேர்த வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபடுதல், 8-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 9-ந் தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம், 10-ந்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது.


Next Story