விலை வீழ்ச்சியால் பறிக்காமல் செடியிலேயே வீணாகும் குண்டு சாமந்தி பூக்கள்


விலை வீழ்ச்சியால் பறிக்காமல் செடியிலேயே வீணாகும் குண்டு சாமந்தி பூக்கள்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் விலை வீழ்ச்சியால் பறிக்காமல் செடியிலேயே குண்டு சாமந்தி பூக்கள் வீணாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், கரடிப்பாக்கம், சிறுவந்தாடு, சின்னமடம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு சாமந்தி பூக்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். எல்லா காலங்களிலும் பூக்கும் பூ என்பதால் இதனை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்த பூக்கள் தற்போது நன்கு பூத்து குலுங்குவதால் பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள பூக்களை அதிகாலை வேளையிலேயே விவசாயிகள் பறித்து விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பூக்கடைகளுக்கு மாலைகளாக கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஆனால் தற்போது பெங்களூருவில் இருந்து இந்த வகை பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுவதால், விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள குண்டு சாமந்தி பூக்களை, வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை.

அப்படியே கொள்முதல் செய்தாலும் கிலோ 10 ரூபாய்க்கு கேட்பதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இந்த பூக்களின் விலை குறைந்துள்ளதால் அதனை பறிக்காமல் செடியிலேயே அப்படியே விவசாயிகள் விட்டுள்ளனர். இதனால் அந்த பூக்கள் வெயிலில் காய்ந்து வீணாகி வருகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குண்டு சாமந்தி பூ சாகுபடிக்கு தங்களது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் ஒதுக்கினால் போதுமானது. 15 நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. குறிப்பிட்ட அளவே உரத்திற்காக செலவிடுகிறோம். பெரும்பாலும் இயற்கை உரத்தையே பயன்படுத்துகிறோம். தினமும் பூத்து வரும் பூக்களை அதிகாலையில் பறித்து கடைகளில் விற்பனை செய்கிறோம். இந்த பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை கிடைக்கிறது. பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சி காலங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை கிடைக்கும். ஆனால் தற்போது பெங்களூருவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யாமல் பெங்களூருவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்த வகை குண்டு சாமந்தி பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதனை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளோம். இதன் காரணமாக எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், நேரில் வந்து பார்வையிட்டு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படும்பட்சத்தில் உழவர் சந்தைகள் மூலம் பூக்களை வாங்கி விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.


Next Story