பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
பணியின்போது வீரமரணம் அடைந்த 188 போலீசாருக்கு வீரவணக்க நாளையொட்டி துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
பணியின்போது வீரமரணம் அடைந்த 188 போலீசாருக்கு வீரவணக்க நாளையொட்டி துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
காவலர் வீர வணக்க நாள்
லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்றைய தினம் நாடு முழுவதும் அந்த ஆண்டு பாதுகாப்புப்பணியின் போது உயிரிழந்த போலீசார் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்படும்.
உயர் அதிகாரிகள் மரியாதை
அதன்படி, நாடுமுழுவதும் கடந்த ஆண்டு உயிரிழந்த 188 போலீசாருக்கு நேற்று வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலர் நினைவு தூணில் திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, டி.ஐ.ஜி. பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேண்டு வாத்தியங்கள் இசைக்க ஆயுதப்படை போலீசார் 66 பேர் 3 முறை விண்ணை நோக்கி சுட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.
இதுபோல், திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் பணியின் போது வீர மரணம் அடைந்த சீருடை பணியாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் உதவி ஆணையர் பிரமோத் நாயர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.