உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
கள்ளக்குறிச்சியில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். கடல்மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் 3 போலீசார் உள்பட இந்தியாவில் மொத்தம் 188 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீரவணக்க நாளாக நேற்று அனுசரிக்கப்பட்டது.
துப்பாக்கி குண்டுகள் முழங்க...
இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கலந்து கொண்டு பணியின்போது உயிர்நீத்த போலீசாரின் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் உயிர்நீத்த காவல்துறையினருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டும், நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டும் உயிரிழந்த போலீசார்கள் நினைவு கூறப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், துணை சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ், மனோஜ் குமார், லஷ்மண குமார், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், கள்ளக்குறிச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.