மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான் - கோவில்களில் சிறப்பு வழிபாடு


மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான் - கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 April 2023 6:27 PM GMT (Updated: 22 April 2023 7:06 PM GMT)

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

திருவாரூர்,

மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

குருப்பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.27 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது.

குருபகவானுக்கு தீபாராதனை

முன்னதாக உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 2-வது கால குருபரிகார ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு சரியாக 11.27 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியடைந்த நேரத்தில் மூலவர் குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர்.

திட்டையில்...

இதேபோல தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

இதனிடையே மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணி அளவில் குருபகவான் இடம் பெயர்ந்துள்ளநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள குருபகவான் தலங்களில் நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story