குருமன்ஸ் இன மக்கள் சாதி சான்று கேட்டு மனு
ஜமாபந்தி நிறைவு நாளில் குருமன்ஸ் இன மக்கள் சாதி சான்று கேட்டு மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. இதில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) வ.தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்துகொண்டார். செங்கம் வட்டாட்சியர் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, துணை வட்டாட்சியர்கள் தமிழரசி, துரைராஜ், லதா, வருவாய் ஆய்வாளர் சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாபந்தியில் புதுப்பாளையம் உள்வட்ட கிராமங்களுக்கு உட்பட்ட புதுப்பாளையம், ஜி.என்.பாளையம், வீராணந்தல், நாகப்பாடி, காரப்பட்டு, படிஅக்ரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கினர்.
புதுப்பாளையம் பகுதியில் உள்ள குருமன்ஸ் இன மக்கள் எஸ்.டி.சாதி சான்றிதழ் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் ஜமாபந்தி அலுவலர் தேன்மொழியிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பர்சாமி, நர்மதா, சத்யா, குணாநிதி, சசிகலா, முருகன் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.