திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது திற்பரப்பு அருவி. இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் வழக்கமான நாட்களை விட கூட்டம் அலைமோதும்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் அங்கு மேக மூட்டங்களுடன் குளுமையான சூழல் நிலவுகிறது.
உற்சாக குளியல்
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்திலும் தங்களுடைய குழந்தைகளுடன் குளித்து குதூகலம் அடைந்தனர். அருவியின் எதிர்புறம் பச்சைப்பசேலென காட்சி தரும் அழகிய புல்வெளி பூங்கா மற்றும் அலங்கார நீரூற்றையும் அவர்கள் பார்த்து ரசித்தனர்.
படகு சவாரி
பின்னர் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு தடுப்பணைக்கு சென்று படகு சவாரி செய்து இயற்கை காட்சியை ரசித்தனர். அப்போது அவர்கள் விதவிதமாக 'செல்பி' எடுத்து கொண்டனர்.
திற்பரப்பு அருவியில் மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதனால் அருவி சந்திப்பில் இருந்து சுற்றுலா வாகனங்கள் வெகு தூரத்துக்கு வரிசையாக நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.