திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
பராமரிப்பு பணிக்காக சிற்றார் -1 அணை திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
பராமரிப்பு பணிக்காக சிற்றார் -1 அணை திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குறைவான அளவு தண்ணீர் கொட்டி வந்தது.
இந்தநிலையில் தற்போது சிற்றார்- 1 அணையில் ஷட்டர் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கோதையாற்றில் கலந்து வருவதால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.
உற்சாக குளியல்
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியிலும் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தனர்.
மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அவர்கள் வந்த வாகனங்கள் அருவி சந்திப்பில் இருந்து வெகு தொலைவுக்கு நீண்ட வரிசையில் நின்றன. சில நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.