மலையோர பகுதியில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
மலையோர பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
மலையோர பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
கடந்த மே மாதம் முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் குளிர்ச்சியான இடமான கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு படையெடுத்து வந்தனர்.
அதே சமயத்தில் நீர்நிலைகளுக்கு சென்றும் வெயிலின் உஷ்ணத்தை தணித்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் இனிமேலாவது வெயிலின் உக்கிரம் தணிந்து மழை பெய்யுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மே மாதத்தில் திற்பரப்பு அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது. எனினும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதோடு அருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர்.
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
இந்தநிலையில் நேற்று காலை முதல் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குதூகலம் அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து அருவியில் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நிலை தொடர்ந்தால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் செல்வார்கள். இன்னும் ஒருவாரம் பள்ளிகளுக்கு விடுமுறை இருப்பதால் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணைகளின் நீர்வரத்து
குமாி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 44 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதுபோன்று சிற்றார் 1- 9.4, களியல்- 12.8, குழித்துறை- 12.4, பெருஞ்சாணி- 19.8, புத்தன் அணை- 17.2, குளச்சல்- 3, பாலமோர்- 7.5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 496 கனஅடி நீர் வருகிறது. அதே சமயம் நேற்று காலை 10.30 மணிக்கு பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 70 கனஅடி நீர் வருகிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 49 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 99 கனஅடி தண்ணீர் வருகிறது.
முக்கடல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 8.6 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.