கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த ரூ.14 லட்சம் குட்கா பறிமுதல்-டிரைவர் கைது


கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த ரூ.14 லட்சம் குட்கா பறிமுதல்-டிரைவர் கைது
x

கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு கடத்தி வரப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் அருகே தொப்பூர் பகுதியில் வாகன சோதனையில் அவர்கள் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர்.

அந்த வேனில் காய்கறிகள் கொண்டு வர பயன்படுத்தப்படும் பெட்டியில் சாக்கு மூட்டைகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பிரித்து பார்த்த போது அதில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தகவலும் வெளியானது.

உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வேனில் இருந்த 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி பகுதியை சேர்ந்த அஜய்குமார் (வயது 33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தினக்கூலிக்கு டிரைவர் வேலை பார்த்து வருவதாகவும், அதன்படி கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூரில் இருந்து பெங்களூருவுக்கு தக்காளி ஏற்றி வந்து உள்ளார். பின்னர் அங்கு குட்கா பொருட்கள் ஏற்றப்பட்டு சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு கொண்டு செல்லும் படி பெங்களூருவில் ராமசாமி என்பவர் கூறினார். அதன்படி குட்கா பொருட்களுடன் வேனை ஓட்டி வந்ததாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story