ரூ.19 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம்


ரூ.19 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம்
x
தினத்தந்தி 20 July 2023 8:15 PM GMT (Updated: 20 July 2023 8:15 PM GMT)

ஆனைக்கட்டியில் இளைஞர்களுக்காக ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் அம்ரித் திறந்து வைத்தார்.

நீலகிரி

கூடலூர்

ஆனைக்கட்டியில் இளைஞர்களுக்காக ரூ.19 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் அம்ரித் திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி கூடம் திறப்பு

ஊட்டி ஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைக்கட்டியில் 2021-2022-ம் நிதியாண்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் அம்ரித் நேற்று திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளது. இன்றைய தினம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள புதிய உடற்பயிற்சிக்கூடம் இளைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கன்வாடி மையம்

இதுபோன்ற திட்டங்களை பின்தங்கிய இப்பகுதியில் செயல்படுத்துவது எளிதல்ல. எனவே பொதுமக்கள், இளைஞர்கள் உடற்பயிற்சிக் கூடத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்வதோடு, இங்குள்ள உபகரணங்களை பாதுகாத்து கொள்வது நமது கடமையாகும். இதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் ஏதேனும் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் இருப்பின் அதனை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆனைக்கட்டி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் வருகை, எடை, உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களின் வருகை, கல்வி, கற்றல் ஆற்றலினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story