துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட; சென்னை விமான நிறுவன ஊழியர் உடல் இன்று தோண்டி எடுப்பு


துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட; சென்னை விமான நிறுவன ஊழியர் உடல் இன்று தோண்டி எடுப்பு
x

துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட சென்னை விமான நிறுவன ஊழியரின் உடல் இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்கப்படுகிறது. இந்த படுபாதக செயலை செய்த புதுக்கோட்டை அழகி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்போரூர்,

சென்னை விமானநிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ஜெயந்தன் (வயது 29). விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் தனது சகோதரி ஜெயக்கிருபா என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 18-ந்தேதி இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து நங்கநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கொலை

போலீஸ் விசாரணையில் ஜெயந்தன் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலவாயல் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணிடம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

அவர் ஜெயந்தனை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசி எறிந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அழகியுடன் திருமணம்

ஜெயந்தன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது பாலியல் தொழில் செய்து வரும் அழகி பாக்கியலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் ஜெயந்தன் அவருடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் ஜெயந்தன் கடந்த 2020-ம் ஆண்டு பாக்கியலட்சுமியை விழுப்புரத்தில் உள்ள மயிலம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார்.

உடலை வெட்டி வீசினார்

இதற்கிடையே கடந்த மாதம் 18-ந்தேதி புதுக்கோட்டை சென்ற ஜெயந்தன் பாக்கியலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமி தனது ஆண் நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்து கொலை செய்து பின்னர் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி பாலித்தீன் கவரில் சுருட்டி கட்டைப்பையில் வைத்து கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி அதிகாலை பஸ் மூலம் சென்னை கோவளம் கடற்கரைக்கு வந்து புதைத்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை சென்றுள்ளர்.

அதன்பின்னர் கடந்த 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதியை வெட்டி பாலிதீன் கவரில் சுருட்டி சூட்கேசில் வைத்து கொண்டு வாடகை காரில் மீண்டும் கோவளத்திற்கு வந்தார். அங்கு தனக்கு பழக்கமான கோவளத்தை சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் சென்று கோவளம் பகுதியில் மற்ற உடல் பாகங்களை புதைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.

பூசாரி கைது

போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து கோவளத்திற்கு அழைத்து சென்று ஜெயந்தனை புதைத்ததாக கூறப்படும் இடத்தை தோண்டி உடலை மீட்கும் பணியை மேற்கோண்டு வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த பூசாரி வேல்முருகன் என்பவரை போலீசார் கோவளத்தில் கைது செய்தனர்.

இவர் அங்குள்ள பூலோகநாயகி உடனுறை பூமிநாதர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். விமான நிறுவன ஊழியரின் உடல் பாகங்கள் கோவளம் பூமிநாதர் கோவில் அருகே உள்ள சதுப்பு நிலங்கள் அடர்ந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று தோண்டி எடுப்பு

இந்தநிலையில் கோவளத்தில் புதைக்கப்பட்ட உடல்களை நேற்று தோண்டி எடுக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, கோவளம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் அங்கு காத்திருந்தனர்.

ஆனால் யாரும் வராததால் உடல் பாகங்களை தோண்டி எடுக்கும் பணி நேற்று நடைபெறவில்லை. இன்று உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

பரபரப்பு தகவல்

பாக்கியலட்சுமியின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்மளாப்பட்டி. அவர் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கூறியதாவது:-

பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது சொந்த ஊரான இங்கு அவர் அதிகம் தங்குவதில்லை. பெரும்பாலும் சென்னையிலேயே இருந்திருக்கிறார். அவ்வப்போது இங்கு வந்து செல்வது வழக்கம். தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். தற்போது இங்கு வந்த போது தான் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தனை கொலை செய்ததாக அங்குள்ள போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். ஜெயந்தனை எப்படி கொலை செய்தார். அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டியது எப்படி என்பது மர்மமாக உள்ளது. சென்னை போலீசார் முழுமையான விசாரணை நடத்திய பின் தான் அதன் விவரம் தெரியவரும்.

உடல் கிடைத்தால் தான்...

தற்போது இந்த வழக்கு தொடர்பாக சென்னை போலீசார் எதுவும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. சென்னை போலீசார் ஜெயந்தனின் உடலை கைப்பற்றி முழுமையாக விசாரித்தால் தான் மேலும் பல தகவல்கள் கிடைக்கபெறும். கைதான பெண்ணின் பகுதியானது பொன்னமராவதி போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இங்கு எதுவும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் பாக்கியலட்சுமி கைது செய்யப்பட்ட தகவல் அந்த ஊரில் நேற்று காட்டுத்தீப்போல் பரவியது.

சூட்கேசை எடுத்து சென்றார்

பாக்கியலட்சுமியின் வீடு செம்மளாப்பட்டி பகுதியில் தனியாக அமைந்துள்ளது. அவரது பெற்றோர் மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கு திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே திருமணமானதாகவும், 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் என 6 குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவரை பிரிந்து அவர் வசித்து வந்த நிலையில் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

அவரது நடவடிக்கை சரியில்லாததால் பெற்றோர் அவருடன் பேசுவது கிடையாது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி அவரை ஊரில் பார்த்ததாக அப்பகுதி பொதுமக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். வீட்டில் அவர் இருக்கும்போது ஆண்கள் சிலர் வந்து செல்வதாகவும் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து அவர் சூட்கேசை எடுத்து சென்றதை அப்பகுதியில் உள்ளவர்கள் சிலர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்தன் கொலை செய்யப்பட்டது இந்த வீட்டில் தானா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கை யார் விசாரிப்பது? போலீசார் இடையே குழப்பம்

ஆலந்தூர், ஏப்.5-

விமான நிறுவன ஊழியர் ஜெயந்தன் கொலை வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக போலீசார் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மாயமானதாக முதலில் சென்னை பழவந்தாங்கல் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்ததாக கூறப்பட்ட இடம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எல்லையில் வருகிறது. மேலும் உடல் பாகங்களை புதைத்த இடம் கோவளம் பகுதி கேளம்பாக்கம் போலீஸ் எல்லையில் வருகிறது.

தற்போது இந்த கொலை தொடர்பாக யார் வழக்கு போடுவது என்பதில் குழப்பம் நிலவுவதால் வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்து உள்ளனர்.


Next Story