சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன


சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
x

வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வேலூர்

சூறைக்காற்றுடன் மழை

வேலூரில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். பகலில் வீட்டை விட்டு வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். இரவிலும் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். புழுக்கம் காரணமாக பலர் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஒருபுறம் வெயில் கொளுத்தினாலும் மற்றொருபுறம் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது.

நேற்று வேலூரில் 104.5 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணி அளவில் சீதோஷ்ண நிலை மாறியது. வானம் இருண்டு திடீரென மழை பெய்தது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழையாக உருவெடுத்தது. பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சாலையோர கடைகள், தேசிய மேம்பாலத்தின் அடிப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மரங்கள் விழுந்தது

கண்களை திறக்க முடியாத அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் சாலைகளில் இருந்த பேரிகார்டுகள் சாய்ந்தது. கடைகளின் விளம்பர தட்டிகளும் கீழே விழுந்தது. பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. ஐஸ் கட்டிகளை குழந்தைகள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையினால் சத்துவாச்சாரி நேதாஜிநகர் மந்தைவெளிதெருவில் ஒரு வீட்டின் அருகே நின்றிருந்த தென்னைமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் மின்ஒயர்கள் மீது விழுந்ததால் ஒயர்கள் அறுந்தது. இதனால் அந்தபகுதியில் மின்தடை ஏற்பட்டது.

காட்பாடி மின்வாரிய அலுவலகத்தில் சில மரங்கள் சாய்ந்து அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதேபோல பழைய பைபாஸ் சாலை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மரங்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

குளம் போல்

கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி குளம்போன்று காட்சியளித்தது. இந்தமழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்தடை

சத்துவாச்சாரி, வள்ளலார் கங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்ததால், மின்ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்தது. டிரான்ஸ்பார்மர்களிலும் மரக்கிளைகள் விழுந்தன. இதனால் சத்துவாச்சாரி, வள்ளலார், ரங்காபுரம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழையினால் சத்துவாச்சாரி பி.எப்.அலுவலகம் பின்புள்ள பகுதிகள், காந்தி நகர் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

ரங்காபுரம் வசந்தம் நகர் பகுதியில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பலர் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒடுகத்தூர்

அணைக்கட்டு, ஒடுகத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலை ஓரம் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த கன மழை காரணமாக வேப்பங்குப்பம் ஊராட்சியில் உள்ள கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. மேலும் தகரத்தால் ஆன கோவிலின் மேற்கூரை காற்றில் பறந்து சென்று விழுந்தது. அதேபோல் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரம், புளியமரம் என பல மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்பாடி

காட்பாடி, காந்திநகர், கழிஞ்சூர், வஞ்சூர், வண்டறந்தாங்கல், கரசமங்கலம், பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. சூறாவளி காற்று வீசியதால் சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

இதனால் குளிர்ந்த காற்று வீசியது.

அணைக்கட்டு

அணைக்கட்டில் நேற்று கங்கை அம்மன் சிரசு திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கூடியிருந்தனர். தாரை தப்பட்டையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததில் போலீஸ் நிலையம் அருகே மின் விளக்கு கம்பத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த அம்மன் கட்-அவுட், உயர் மின் கோபுர கம்பத்துடன் அடியோடு சாய்ந்து அருகில் உள்ள உயர்மின்அழுத்த கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி பயங்கர சத்தத்துடன் மின்தடை ஏற்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர்மேடு என்ற பகுதியில் புளியமரங்கள் மின்கங்கள் மீது சாய்ந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.பலமநேர் சாலையில் புளியமரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அமலுவிஜயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணை தலைவர் அஜீஸ், ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகாபரத், கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்டோர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

மின்வாரிய உதவிப் பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட மின் பணியாளர்கள் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, முகேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

உயிர் தப்பிய பெண்கள்

கள்ளூர் கே.எம்.ஜி.கார்டன் பகுதியில் சாய்ந்த புளிய மரத்தின் ஒரு கிளை குடிசை மீது விழுந்து அமுக்கியது. அப்போது குடிசை வீட்டில் இருந்த சாந்தி (வயது 50), அவரது உறவினர் 80 வயது மூதாட்டி ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக வெளியே ஓடி உயிர் தப்பினர்.


Next Story