ஈரோட்டில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஈரோட்டில் இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி எடுத்தது. இதன் காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நேற்று பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
இதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது சிறுவர்கள் ஆலங்கட்டியை கையில் எடுத்து ஆனந்தமாக விளையாடினர். இந்த மழை சுமார் ½ மணி நேரம் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை தூறிக்கொண்டே இருந்தது.
குளிர்ந்த காற்று வீசியது
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் வீதிகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது.
மேலும் இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நின்றது. சில இடங்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். நேற்று மாலை பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.