பாதியில் கரை திரும்பியகுளச்சல் விசைப்படகு மீனவர்கள்


பாதியில் கரை திரும்பியகுளச்சல் விசைப்படகு மீனவர்கள்
x

ஆழ்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் பாதியில் கரை திரும்பினர். அவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்ததால் கவலை அடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

ஆழ்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் பாதியில் கரை திரும்பினர். அவர்களுக்கு குறைவான மீன்களே கிடைத்ததால் கவலை அடைந்தனர்.

விசைப்படகு மீனவர்கள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் சுமார் 7 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய கணவாய், இறால் புல்லன், கேரை, சுறா, கிளி மீன்கள் போன்றவை கிடைக்கும்.

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் கடந்த வாரம் முதல் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. ஆனால் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

சூறைக்காற்று

இந்தநிலையில் நேற்று ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் பாதுகாப்பு கருதி அவசரமாக பாதியிலேயே கரை திரும்பி உள்ளன. அவ்வாறு கரைக்கு திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கரை திரும்பிய விசைப்படகுகளில் கணவாய், இறால், கிளி மீன்கள், கேரை போன்ற மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தன. அவை ஏலக்கூடத்துக்கு கொண்டவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் குறைவாக கிடைத்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

விலை உயர்வு

இதனால், மீன்களின் விலை உயர்ந்தது. சாதாரணமாக கிலோ ரூ.200 க்கு விற்பனையாகும் கட்டில் கணவாய் மீன் ரூ.450-க்கும், ரூ.150-க்கு விற்பனையான ஆக்டோபஸ் ரக கணவாய் மீன்கள் ரூ.300-க்கும், பொட்டு கிளி மூக்கு மீன் கிலோ ரூ.40-க்கும், புல்லன் இறால் ரூ.60-க்கும் விற்பனையானது.

கடந்த ஒரு வாரமாக குளச்சலில் பகுதியில் மீன்பிடி சீசன் மந்தமாகி வரும் நிலையில், சூறைக்காற்று காரணமாக விசைப்படகுகள் பாதியில் கரை திரும்பியதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.


Next Story