மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மூலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சிவாஜி, பொருளாளர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை உறுதிப்படுத்த வேண்டும். பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை ஒருவர் அல்லது இருவருக்கும் மேல் ஏற்றக்கூடாது என நடத்துனர், ஓட்டுனர் கூறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் புகார் அளிக்க தொடர்பு எண் வழங்கி அனைத்து பஸ்களிலும் விளம்பர 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை மீறும் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் போக்குவரத்து அதிகாரிகள், மாற்றுத் திறனாளி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.