மகனுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா
மகனுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம் நடத்தினார்.
சேலம் சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்த அவர், திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனது மகன் தன்வந்திரகுமார். மல்லமூப்பம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தான். பொதுத்தேர்வு முடிவுகள் வந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை மகனின் பள்ளி மாற்றுசான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ரூ.62 ஆயிரம் கல்விகட்டணம் நிலுவை இருப்பதாகவும், அதை செலுத்தினால் மட்டும் மாணவனின் மாற்றுச்சான்றிதழ் தருவதாக கூறுகிறார்கள். தற்போது மகனின் 11-ம் வகுப்பு கல்வி பாதிக்கப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே பலமுறையும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி தர்ணாவில் ஈடுபட்டேன், எனவே, மகனின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.