கள்ளக்குறிச்சி, மணம்பூண்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி, மணம்பூண்டியில் மாற்றத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் செயலாளர் பழனி, மாவட்ட பொருளாளர் முத்துவேல், துணை தலைவர்கள் வைத்திலிங்கம், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் வேலு, செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், 4 மணி நேர வேலை மற்றும் அரசு நிர்ணயிக்கும் முழுக்கூலியை வழங்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஆண்டு முழுவதும் மனித வேலை நாட்களை கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகி ஏழுமலை, மாவட்ட துணை தலைவர் சாந்தி, துணை செயலாளர் அறிவழகன், குழு உறுப்பினர்கள் செல்வம், சண்முகம், பழனிசாமி, அஞ்சலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மணம்பூண்டி
இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கண்டாச்சிபுரம் வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.