60 கிலோ பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்ய ஒப்படைப்பு
நெகிழி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க பொதுமக்களை மஞ்சள் பைகளை பயன்படுத்த வைக்கும் வகையில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மீண்டும் மஞ்சள் பை என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் குறித்து புலிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா மேற்பார்வையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியர் மாதையன், நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமு, முதுகலை ஆசிரியர் ஆரோக்கியம் ஆகியோர் மாணவர்களிடம் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதையொட்டி பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த 3 மாதங்களாக சேகரித்தார்கள். இவ்வாறு மொத்தம் 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் துப்புரவு பணியாளர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஒப்படைத்தனர்.